பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான்: உச்சநீதிமன்றமேஉறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது:துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை தேவை! பாமக தலைவர் மரு. அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் 10 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் தாமதப்படுத்தி வந்த நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுனருக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டது. அதன்படி இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான். இதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை முழுமையாக விசாரிக்காத சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு , அந்த சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதையும் செல்லாது என தீர்ப்பளித்து விட்ட உச்சநீதிமன்றம், அந்த வழக்கை 6 வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து நடைமுறைக்கு கொண்டு வருவது தான். அதன் மூலம் தான் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை விரைவாக நியமிக்க முடியும்.

மாறாக, தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்த்ததாக அமைந்து விடும்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template