பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைதமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே – வரலாற்றுஅறிவிப்பு: பாமகவின் 46 ஆண்டு கோரிக்கையைநிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றிகள்!

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாட்டாளிகளின் 46 ஆண்டு சமூகநீதி கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது; வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் நடப்பாண்டுக்கான கொள்கை ஆவணமான ஆளுனர் உரை இன்று படிக்கப்பட்டது. தமிழக ஆளுனர் ஆர்.வி.ஆர்லேகர் அவர்களால் படித்தளிக்கப்பட்ட ஆவணத்தில், ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க நாம் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒற்றை சமூகநீதி அறிவிப்புக்காகவே முதலமைச்சர் விஜய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்காக தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் பாமக சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மாநிலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய அடிப்படையான தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள் தான். சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேயை நடத்துவதன் மூலம் தான் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். அதனால், தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்புகளை தனித்தனியாக நடத்த வேண்டும் என்று 46 ஆண்டுகளாக பாட்டாளிகள் பாடுபட்டு வருகின்றனர். 1980&ஆம் ஆண்டு ஜூலை 20&ஆம் தேதி மருத்துவர் அய்யா அவர்களின் அயராத முயற்சியால் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதல் தீர்மானமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.

அதன்பின் கடந்த 46 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கையை ஆயிரமாயிரம் முறை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் தொடங்கி தில்லி வரை ஏராளமான போராட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் இயக்கங்களையும் பாமக நடத்தியிருக்கிறது. அவற்றில் சமூகநீதி சர்வே நடத்தப்பட வேண்டும் என மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கும் சமூகநீதி சர்வே அவசியமாகும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியதாலும், பிரதமர்களுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதியதாலும் தேசிய அளவில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட, மாநில அளவில் சமூகநீதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு 2008&ஆம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. கடந்த ஆட்சிகளின் போது முதலமைச்சர்களிடம் இதற்கான கோரிக்கை மனுக்களை பா.ம.க. வழங்கியது.

2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11&ஆம் தேதி எனது இல்லத்திற்கு வந்து என்னை சந்தித்த முதலமைச்சர் விஜய் அவர்களிடம், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே நடத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக கடந்த 5&ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி சர்வேயை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அவர்களை கடந்த 9&ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளை விளக்கியதுடன், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், எங்களின் கொள்கையும் அது தான் என்று கூறி தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் ஆளுனர் உரையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எந்த பெயரில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்ததோ, அதே சமூகநீதி சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 95 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதி சர்வேயும் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான தருணம் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என்று 1980&களில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி, கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் வரை கடந்த 46 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த அனைவரிடமும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினோம். ஆனால், அவர்களின் ஆட்சிக் காலங்களில் இது சாத்தியமாகவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் தான் சமூகநீதி சர்வேயை சாத்தியமாக்குவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் 46 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கவில்லை. கடந்த 46 ஆண்டு கால எங்களின் சமூகநீதிப் பயணத்தில் தோளோடு தோள் நின்ற, போராட்டங்கள், மாநாடுகள், மக்கள் இயக்கங்கள் முதல் அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் வெற்றியாகத் தான் இதை நான் பார்க்கிறேன். அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். நிறைவாக, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடச் செய்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template