கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழகத்திற்கு நீர் திறக்க நாளைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி அறிக்கை!

கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60 டி.எம்.சியாக உயர்ந்திருக்கிறது. நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்து விட்டது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அது தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும் 0.8 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதையும் தில்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template