திமுக ஆட்சியில் சட்டவிரோத மது வணிகம்தலைவிரித்தாடுவதன் மிக மோசமான சான்று! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கண்டனம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த போடூர் என்ற கிராமத்தில் 4 இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சந்து மதுக்கடைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து சூறையாடியுள்ளனர். சட்டவிரோதமாக மது வணிகம் செய்து வந்த கோவிந்தன் என்பவர் பெண்களிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். எந்த ஒரு சிக்கலுக்கும் மக்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது விரும்பத்தக்க தீர்வு அல்ல என்றாலும், அப்படி ஒரு சூழலுக்கு அந்த கிராம மக்களைத் தள்ளியது தமிழகத்தை ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த திமுக தான்.

போடூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் 4 சந்து கடைகளும் இப்போது புதிதாக முளைத்தவை அல்ல. அவை கடந்த ஐந்தாண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றன. அவற்றை அகற்ற வேண்டும் என்று அங்குள்ள மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். போடூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தருமபுரி மாவட்டம் முழுவதும் இதே போன்ற சந்துக் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு எதிராக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சந்துக்கடைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் குரல் எழுப்பியுள்ளார். ஆனால், அவற்றை மூடுவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சில பெண்களை பணம் கொடுத்து அழைத்து வந்து 7 கிராமங்களில் அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தச் செய்த கீழ்த்தரமான அரசியலைத் தான் திமுக செய்தது.

தமிழ்நாடு முழுவதும் 4787 டாஸ்மாக் கடைகள் சட்டப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றன என்றால், சட்டவிரோதமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிக்கப்படுவது ஒரு புறம் என்றால், இன்னொருபுறம் இந்த சந்துக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவை வசூலிக்கப்படாமல் ஏய்க்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக ஊழல் செய்யப்படுகிறது. இதற்கு எதிராக பாமக பலமுறை போராடியும் மது வணிகத்தையே முதல் கொள்கையாகக் கொண்ட திமுக அரசு சந்துக்கடைகளுக்கு ஆதரவாகவே இப்போது வரை செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டவிரோத மது வணிகம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கான மிக மோசமான சான்று தான் போடூர் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வை மது வணிகத்திற்கு எதிரான மக்களின் கொந்தளிப்பாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, குற்றமாகப் பார்க்கக் கூடாது; இதற்காக சம்பந்தப்பட்ட கிராம பெண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மாறாக, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத சந்துக் கடைகளை மூடுவதற்கு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100% LikesVS
0% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template