புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்டிஏ கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் புதிதாகத் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாததாலும் ரங்கசாமி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் ரங்கசாமிக்கு தெரியாமலேயே 3 பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்தது, ஆளுநர் மூலமாக பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தது ஆகியவற்றாலும் ரங்கசாமி அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.
இதனிடையே புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 16) தொடங்கிய நிலையில் நேற்று யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரிக்கு வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
