புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண்கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண்
கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள்
மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமக்கு நேர்ந்த அவலத்தை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் உள்ள இளம்பெண்ணை மனித மிருகங்கள் சீரழிந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

கறம்பக்குடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றி வரும் அந்தப் பெண் , வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, அங்கு மகிழுந்தில் வந்த கும்பல் அவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது.

அதேபோல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா வணிகம் குறித்து செய்தி வெளியிட்டதால், ஆத்திரமடைந்த கஞ்சா வணிகக் கும்பல் ஒன்று, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா முகைதீன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த செய்தியாளர் தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பெருந்தீமைகளில் குறிப்பிடத்தக்கது கஞ்சா வணிகமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தது ஆகும். திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்வது கவலையளிக்கிறது.

தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். திமுக அரசில் ஏற்பட்ட தீமைகளை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான ஆர்வம் காட்டுவதற்கு இந்த நிகழ்வுகள் சான்றாகும்.

புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்விலும், கஞ்சா வணிகக் கும்பலால் செய்தியாளர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்விலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template