தர்ப்பண விளக்கமும் பலனும் – பேராசிரியர். சிவப்பிரியா

🔯 ஆத்மா ஆத்ம நாதரான பரமேஸ்வரன் திருவருளால் உடலோடு இணைகிறது. இது பிறப்பு. பின்னர் உயிர் பிரிகிறது. இது இறப்பு. சர்வேஸ்வரன் திருவருளால் பிரம்மன் இணைக்கின்றான், யமன் பிரிக்கின்றான். யமன் உயிர் வாங்க வரும்போது சிவனருளால் ஆத்மா துன்பம் இல்லாமல் பிரிந்து மேல் எழுகிறது.

⚜️ ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்

🌻 மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போது மரணம் கை கூட்டுவது அஞ்செழுத்தாமே (திருமூலர்)

🌷 நமன் தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே (சம்பந்தர்) என்பவை தெய்வீகத் திருமுறைகள். இதனாலேயே உயிர் பிரியும் போது கடைசி நேரத்தில் சிவ நாமம் சொல்லி கங்கை நீரை வாயில் விடுகின்றனர். சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்பார் என்பது பழமொழி.

🔥 மண் மிசை மன்னாப் பிறவி இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் என்பது திருமந்திரம். உடலை விட்டுப் பிரிந்த உயிர் துயரம் கொண்டு அலையாமல் அமைதியும் தெளிவும் பெற்று ஒரு நிலையில் இருப்பதற்காக ஈசன் திருவருளை வேண்டி நீரோடு எள் இடுவதற்குத் தர்ப்பணம் என்று பெயர். இறந்த முன்னோர்களுக்குப் பித்ரு பிதிரர் தென் புலத்தார் என்று பெயர்.

🌏 தளர்வு இல் பிதிர் பதம் தங்கி (திருமூலர்)

🌑 தென்புலத்தார் — ஓம்பல் தலை (திருவள்ளுவர்)

☸️ தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர் (புறநானூறு) என்று இலக்கியங்கள் கூறுகின்றன. பரமனைத் தொழுது எள்ளும் நீரும் விடும்போது உயிர்கள் வேதனையிலிருந்து விடுபட்டுத் தெளிவடைந்து ஆறாறு (36) தத்துவங்களில் இறுதி யாகிய நாதாந்த போதத்தைக் கடக்கிறது.

⚜️ உள்ள உயிர் ஆறாறு அதாகும் உபாதியைத் தெள்ளி அகன்று நாதாந்தம் செற்று மேல் உள்ள இருள் நீங்க ஒரு உணர்வாகுமேல் எள் இடின் நாதாந்த போதத்து ஏற்றிடும் போதமே என்பது திருமந்திர ஆகமம். சிவ நாமம் சொல்லி எள் இடும் போது உயிர் பரமன் திருவருளால் வினை நீங்கி மேல் நிலை அடைந்து தேவர்களாகப் பிறக்கின்றன அல்லது மும்மலமும் நீங்கி முழுத் தூய்மை அடைந்து முக்தி பெற்று சிவலோகம் சேர்கின்றன.

⚜️ சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவ கதிதானே (திருமந்திரம்)

☸️ மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை ஆழாமே அருள் அரசே (திருவாசகம்) என இருபத்தோரு தலைமுறையினரும் சிவனருளால் நலம் பெறுகின்றனர்.

⚜️ தற்பணம் அதனில் சாந்தம் புத்தூர் வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும் (திருவாசகம்) என சாந்தம் புத்தூர் என்ற ஊரில் தர்ப்பணம் செய்த வேடனுக்கு ஈசன் அருள் புரிந்ததை ஓங்கார வாசகர் போற்றுகிறார். ( தமிழில் சொல்லுக்கு முதலில் குறிலை அடுத்து வராது ) அதனால் செந்தமிழ் இலக்கியங்களில் தற்பணம் என்று உள்ளது. கர்மம் — கன்மம், தர்மம் — தருமம் என்று அமையும்.

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடியார் சரீரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படுவாரே (திருமந்திரம்)

என சித்தம் சிவமாய் நமசிவாய நாமம் ஓதிச் செய்யும் போது ஆத்மா சிவனருளால் பசி கோபம் முதலிய உயிர்த் தன்மை நீங்கி மீண்டும் பிறவியோ சொர்கம் பிரம்ம லோகம் வைகுண்டம் முதலிய வான லோக வாழ்வோ இல்லாமல் ஆனந்த நிலை அடைந்து சிவ லோகம் சேர்கிறது. சிவ நினைவு இல்லாத போது வேதமே ஓதிச் செய்யும் வேள்வியாலும் ஒரு பலனும் இல்லை. வேதம் ஓதில் என் ? வேள்விகள் செய்கில் என் ? நீதி நூல் பல நித்தல் பயிற்றில் என் ? ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என் ? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே. (அப்பர்).

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template