
இமாலயப் பிரதேசத்தில் நிலவும் மிகக்கடுமையான நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 30% வரையிலும், முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் 30 முதல் 50% வரையிலும் ஊதியம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மை மிக மோசமாக இருந்தால், அந்த மாநிலத்தில் என்னென்ன சீரழிவுகள் ஏற்படும் என்பதற்கு இமாலயப் பிரதேச அரசின் நிலை தான் சான்று ஆகும்.
2026&27ஆம் ஆண்டுக்கான இமாலயப் பிரதேச அரசின் நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுக்கு தாக்கல் செய்தார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு 6% முதல் 8% உயர்த்தப்படும் நிலையில், இமாலயப்பிரதேச அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிதிநிலை அறிக்கை மதிப்பை 6.12% குறைத்திருக்கிறது. கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் அது ரூ.54,928 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, நிதி நெருக்கடி காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு அம்மாநில முதலமைச்சரின் ஊதியம் 50%, அமைச்சர்களின் ஊதியம் 30%, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 20% வீதம் குறைக்கப்படும்; அதிகாரிகளில் தலைமைச் செயலாளர், செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் ஊதியம் 30%, காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளின் ஊதியம் 20% குறைக்கப்படும்; அனைவருக்கும் வழங்கப்படும் 3% ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் ஊதியக் குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. குறைக்கப்படும் ஊதியம் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப் படவில்லை. இமாலயப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு இது தாங்க முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.
இமாலயப்பிரதேச அரசு கடந்த இரு ஆண்டுகளாகவே அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதியில்லாமல் தடுமாறி வந்தது. பல மாதங்கள் மிகவும் தாமதமாகத் தான் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த நிலைக்குக் காரணம் அம்மாநில அரசின் மிக மோசமான நிதி மேலாண்மை தான். அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், செலவை மட்டும் அதிகரித்ததன் விளைவு தான் இது.
இமாலயப் பிரதேச அரசின் நிதிநிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதோ, அதை விட மோசமான நிலையில் தான் தமிழ்நாட்டின் நிதிநிலை உள்ளது. இமாலயப் பிரதேச அரசின் மொத்தக்கடன் ரூ.1 லட்சம் கோடி. அம்மாநில அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514 கோடி. நிதிநிலை அறிக்கை மதிப்பை விட கடனின் அளவு 170% அதிகம் ஆகும். ஆனால், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026&27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பு ரூ. 4 லட்சத்து 52,833.35 கோடி. அதே நேரத்தில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.10 லட்சத்து 71,770 கோடி. அதாவது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பை விட கடனின் அளவு 237% அதிகம் ஆகும். நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 170% அளவுக்கு கடன் கொண்ட இமாலயப் பிரதேச அரசே 30% வரை ஊதியத்தை குறைக்க வேண்டியிருக்கும் நிலையில், நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 237% கூடுதல் கடன் வைத்திருக்கும் தமிழகத்தின் நிலை என்னவாகும்? என்பதை யோசித்தால் தெளிவு பிறக்கும்.
திமுக அரசு தொடர்ந்து மூடி மறைத்து வரும் ஓர் உண்மை என்னவென்றால், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையே கடன் வாங்கித் தான் வழங்கி வருகிறது என்பதைத் தான். ஒரு மாநில அரசு அதன் வருவாய் வரவுகளுக்குள் வருவாய் செலவுகளை கட்டுபடுத்துவது தான் சிறந்த நிதி மேலாண்மை ஆகும். 2025&26ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்தம் வருவாய் வரவுகள் 3,09,698 கோடி ஆகும். இதில் மானியங்களுக்கு ரூ.1,59,486.87 கோடி, வட்டி செலுத்த ரூ.70,753.99 கோடி, பிற நிலையான செலவுகளுக்கு ரூ.16,921.78 கோடி என 2,47,162.64 கோடியை செலவு செய்தது போக அரசிடம் ரூ.62,535 கோடி மட்டும் தான் மீதமிருக்கும்.
ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.90,463.98 கோடி, ஓய்வூதியமாக ரூ.41,290.40 கோடி என ரூ.1,31,754.38 கோடி வழங்கப்பட வேண்டும். அரசிடம் ரூ.62,535 கோடி மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள தொகையை கடன் வாங்கித் தான் திமுக அரசு வழங்கியது. அதனால் தான் கடந்த ஆண்டில் ரூ.69,219 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளிலும் இது தான் நடந்திருக்கிறது. அதனால் தான் திமுக ஆட்சியில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.9,52,374 கோடியாக அதிகரித்திருக்கிறது.
இந்த அவல நிலைக்கு காரணம் திமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை தான். திமுக அரசைப் பொறுத்த வரை ஊழல் செய்வதில் அலிபாபாவும் 40 திருடர்களைப் போலவும், நிர்வாகம் செய்வதில் பரமார்த்த குருவும் அவரது சீடர்களைப் போலவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தை 30% முதல் 50% வரை குறைக்க வேண்டியிருக்கும்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், அரசின் வருவாயைப் பெருக்கி, தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். நிர்வாகத் திறன் இல்லாத திமுக அரசால் அதை செய்ய முடியாது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதன் பின்னர் அமையவுள்ள புதிய அரசின் தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1 Comment
இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உண்டு நாம் அனைவரும் மத்தியஅரசின் கீழ் தானே இருக்கிறோம்… ஒரு மாநிலம் இதுபோன்று அதிக சுமைக்கு உள்ளாகும் போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது ஏன் மத்திய அரசுகள் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது மத்திய அரசு நாம் ஓட்டு போட்டு தானே உருவாகுகிறது அந்தந்த மாநிலத்தில் வாழும் மக்கள் ஓட்டு போட்டு நாடகம் மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள் அது மட்டும் இன்றி நான் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் சபை ராஜ்யசபா நான் உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள் இவர்கள் எல்லாம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் ஏன் ஒரு மாநிலத்தில் இந்த அளவுக்கு நிதி நெருக்கடி வரும் வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நமக்கு என்ன என்று ஒதுங்கி இருந்தால் திவால் ஆகும் ஒரு தனியார் நிறுவனத்தில் இது போன்ற ஒரு நிலைமை இருந்தால் அந்த நிறுவனம் என்ன ஆகுமோ அதே நிலைதான் மாநிலங்களுக்கும் உண்டு இந்த தவறை மாநில அரசின் மீது சுமத்தி விட்டு தப்பிக்க முயல்வது மிகப்பெரிய குற்றம் ஒரு மாநில நிதி நெருக்கடிக்கு செல்லும் போது மாநில அரசு நிர்வாகம் சரியில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் இந்த நிர்வாகம் சரியில்லாத மாநிலத்தில் பாதிக்கப்படுவது யார் இந்த நாட்டில் இருக்கும் மக்கள் தானே எப்போது மத்திய அரசு இதுபோன்ற மக்களை காக்கும் நடவடிக்கைகளை முன்கூட்டை ஆராய்ந்து உதவி செய்யும்…
இன்று இந்த மாநிலம் பிறகு தமிழகம் பிற எந்த மாநிலம் ஆகையால் இதை ஒரு முன்னோடியாக வைத்துக் கொண்டு மத்திய அரசு இதுபோன்ற திவால் ஆகும் நிலைமைக்கு ஏன் உன் மானத்தை கொண்டு போக வேண்டும் மாநில நிர்வாகம் சரி இல்லை என்றால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்து உதவி புரிய வேண்டும் தவிர பழிகள் மொத்தத்தையும் மாநில அரசின் மீது போட்டுவிட்டு மத்திய அரசாங்கம் கை கழுவுவது என்பது நியாயம் மானசெயலா என்று கேட்டுப் பாருங்கள் … மக்களின் நலனில் அரசியல் செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் அது தவறு