பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம், தீர்மானங்கள் : கான்ஃப்ளுயன்ஸ் அரங்கம், மாமல்லபுரம் நாள்: 29.07.2026

தீர்மானங்கள்

1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ச.வடிவேல் இராவணன், ம. திலகபாமா ஆகியோருக்கு வாழ்த்துகள்! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச் செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா மற்றும் பிற நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டுமே 28-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களின் பதவிக்காலம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைவதால், அப்பதவிகளுக்கு கட்சி அமைப்பு விதி எண்கள் 26, 27 ஆகியவற்றின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலான தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநில பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தலைவர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு ச.வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு ம.திலகபாமா ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் மூவரும் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பா.ம.க. அமைப்புத் தேர்தலை நடத்த அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அவர்களின் தேர்வை இப்பொதுக்குழு அங்கீகரிப்பதுடன், அவர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி 37 ஆண்டுகளை நிறைவு செய்து, 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரப் படிக்கட்டுகளில் பாமகவை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையும், கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கடமையை கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சிறப்பாக நிறைவேற்றுவார் என்று இப்பொதுக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. பாமகவின் 37 ஆண்டு கால பயணமுமே ஏராளமான மைல்கற்களைக் கொண்டது தான் என்றாலும், கடந்த ஓராண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட அரசியல் பணிகளும், அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை 25-ஆம் நாள் தொடங்கி நவம்பர் 9-ஆம் நாள் வரை மொத்தம் 109 நாள்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வீசிய அலை பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக உள்ள மாவட்டங்களில் நுழையாமல் தடுத்ததும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதிக்கு எதிராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட 4 நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் உழவர்களிடம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்; அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இந்த பொதுக்குழுக் கூட்டம், அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவளிக்க உறுதியேற்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி, அரசியல் சாதனைகளை இப்பொதுக்குழு பாராட்டுகிறது; நன்றி தெரிவித்துக் கொள்கிறது! தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அண்மையில் 88-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இப்பொதுக்குழு வாழ்த்துகிறது. தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்து, 100 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு சமூகநீதி வழங்கியவர்; சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியவர்; சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர்; மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்து ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்; சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்; ஈழத்தமிழர் நலனுக்காக எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்; தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் என ஏராளமான பெருமைகள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரை வாயிலாக அறிவித்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், அறிவிக்கச் செய்த பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும் - சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் 46 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால், சமூகநீதி சர்வே என்ற நமது கனவு கடந்த காலங்களில் கனவாகவே இருந்தது; நனவாகவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சமூகநீதி சர்வே என்ற கனவை நனவாக்க பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இல்லம் தேடி வந்து சந்தித்த முதலமைச்சர் விஜய் அவர்களிடம் இக்கோரிக்கையை வலியுறுத்திய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், கடந்த ஜூன் 5-ஆம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். ஆளும் த.வெ.க., அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கியக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இதற்கு ஆதரவளித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் ஜூன் 9-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அதன்பயனாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையில், மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர், தமிழகத்தில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குறுதியை அளித்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், இந்த அறிவிப்பை வெளியிடச் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் இந்த பொதுக்குழு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு நடத்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியான வீட்டுப் பட்டியல் தயாரிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், தமிழ்நாடு அரசின் சமூகநீதி சர்வே விரைந்து மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 4 நாள்கள் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்! கர்நாடகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான சதித்திட்டத்தில் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ஈடுபட்டிருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்; தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் அழிந்து விடும் ஆபத்துள்ளது. இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழையும் பிலிகுண்டுலுவில் தொடங்கி காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இப்பொதுக்குழு கூட்டம் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்: புதிய நடுவர் மன்ற கோரிக்கையையும், கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தும் முடிவையும் கைவிட்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்! நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேகதாது அணை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி, ‘‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப் படவில்லை’’ என்று கூறியிருக்கிறார். கர்நாடகத்தில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என்று இரு மாநிலங்களுக்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் பொருத்தமற்ற இன்னொரு பகுதியை சுட்டிக்காட்டி, மேகதாது அணையை தமிழகத்தால் தடுக்க முடியாது என மத்திய நீர்வள அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலன்களுக்கு எதிராக மத்திய அரசும், கர்நாடக அரசும் கைக்கோர்த்து செயல்படுவதையே இது காட்டுகிறது; தமிழகத்திற்கு எதிராக பின்னப்படும் சதி வலையை `தமிழகம் ஒன்றுபட்டு கிழித்தெறிய வேண்டிய காலம் வந்து விட்டதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில் மேகதாது அணை சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பேச்சு நடத்துவது, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது போன்ற பிற்போக்கான நடவடிக்கைகளை கைவிட்டு தமிழ்நாடு அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். அடுக்கடுக்கான சட்டப் போராட்டங்களை நடத்தி மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வைப்பது தான் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு ஆகும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: வெளிச்சந்தையில் கடன் வாங்கியாவது கூட்டுறவு வங்கிகளில் அரசு செலுத்த வேண்டும்! தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் ஏமாற்றமளிக்கும் முடிவுகளில் முதன்மையானது பயிர்க்கடன் தள்ளுபடி ஆகும். ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கூட்டுறவு பயிர்க் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் த.வெ.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகவும், ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களில் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து ரூ.75,000 வரையிலான கடன்களை மட்டும் முழுமையாக தள்ளுபடி செய்தது. இந்த பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளின் கடன் சுமையை போக்கவில்லை; அவர்கள் துயரம் தீரவில்லை. இந்தியாவில் சபிக்கப்பட்ட சமூகம் என்றால் அது உழவர்கள் தான். உலகிற்கே உணவு படைக்கும் அவர்கள் பசியார உண்ண முடியாது; கடனின்றி வாழ முடியாது; நிம்மதியாக இருக்க முடியாது என்ற நிலை தான் நிலவுகிறது. தாங்க முடியாத கடன் சுமையில் அவர்கள் தவிக்கும் நிலையில், அவர்களின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டால் அவர்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, உழவர்களின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும்! கல்வித்துறையில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய சமூக அநீதி என்னவென்றால் நீட் தேர்வு தான். சமமற்றவர்களை சமமானவர்களாக நிறுத்தி மருத்துவப் படிப்புக்கு போட்டியிடச் செய்வது சமூகநீதி அல்ல. நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேருவோரில் 98 விழுக்காட்டினர் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி பயிற்சி மையங்களில் படித்தவர்கள்; 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக சமூகநிலையிலும், பொருளாதார நிலையிலும் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி வாய்ப்பை வழங்கும் நீட் தேர்வு இனியும் தொடர்வது எந்த வகையிலும் நியாயமல்ல. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த இரு நோக்கங்களும் நிறைவேறவில்லை. மாறாக, மருத்துவக் கல்வி வணிகமயமாவதும், கல்வியின் தரம் குறைவதும் தான் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நீட் தேர்வு அச்சத்தாலும், தோல்வியாலும் கடந்த பத்தாண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 45-க்கும் மேற்பட்டோர் உயிர்களை ஈந்திருக்கின்றனர். இவை அனைத்துக்கும் மேலாக நீட் தேர்வு முறைகேடுகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால் மாணவர்களும், இளைய தலைமுறையினரும் எந்த அளவுக்கு கொந்தளித்துள்ளனர் என்பதற்கு தில்லியில் நடைபெற்ற போராட்டங்கள் தான் சான்று. இந்த உண்மையை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் குறைந்தது தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு அரசியல் சட்டத் திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதால், மத்திய அரசின் சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால், நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீட் விலக்கு பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வலியுறுத்துகிறது,

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும்; 50 ஆண்டு கால அநீதிக்கு இப்போதாவது மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்! கல்வித் துறையில் இப்போது நிகழும் குளறுபடிகளுக்கும், அதிகார மோதல்களுக்கும் காரணம் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்படும் வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ஆம் அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 11-ஆம் பொருளாக இடம்பெற்றிருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான். இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது 1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42-ஆம் அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, 1977-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் நாள் முதல் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலில் 25-ஆம் பொருளாக சேர்க்கப்பட்டது. அதன் விளைவாக கல்வித் துறையில் மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசே நடத்தும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளும், மும்மொழிக் கொள்கையும் திணிக்கப் படுவதற்கு இதுவே காரணம் ஆகும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம் ஆகும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நடைபெறும் நிலையில், இப்போதாவது ஐம்பதாண்டு அநீதிக்கு முடிவுரை எழுதும் வகையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று பாமக கோருகிறது.

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் பிடிவாதம், வடகிழக்கு பருவமழை பொய்த்தது ஆகிய இரட்டைத் தாக்குதலால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக அரசு காவிரியில் உரிய நீர் திறக்காததால் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை ஜூலை மாதம் முடியும் தருவாயில் கூட திறக்கப்படவில்லை. பருவமழை பெய்யாததால் ஆகஸ்ட் மாதத்திலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் பல இடங்களில் குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. சம்பா பருவ சாகுபடியையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை 40%க்கும் குறைவாகவே பெய்திருப்பதால் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிப்பதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்; உழவர்களின் நிலவரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; பாதிக்கப் பட்ட குறுவை பயிர்களுக்கும், சம்பா சாகுபடி செய்யப்படாததால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்! காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டு சரியான நாளில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இதுவரை இல்லாத வகையில் 6.31 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் குறுவை சாகுபடி வழக்கத்திற்கும் அதிகமான பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விட்டது. பிற மாவட்டங்களிலும் குறுவை சாகுபடி பாதியாக வீழ்ச்சியடைந்துவிட்டது. இதனால் லட்சக்கணக்கான உழவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்! நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,441 ஆகவும், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை டன்னுக்கு ரூ.3383 ஆகவும் இருக்கும் என மத்திய அரசு அறித்துள்ளது. உழவர்கள் எதிர்பார்த்த கொள்முதல் விலையில் 70 விழுக்காடு அளவுக்குக் கூட இவை இல்லை. ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2400 செலவாகும் நிலையில் ரூ.41 மட்டும் லாபம் வைத்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது நியாயமல்ல. அதேபோல், ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.3300 செலவாகும் நிலையில் ரூ.83 மட்டும் கூடுதலாக வைத்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது அநீதியாகும். இந்த அநீதியை தமிழ்நாடு அரசு தான் களைய வேண்டும். கொள்முதல் விலை பற்றாக்குறையைப் போக்க மாநில அரசுகளின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதைப் போல தமிழ்நாடு அரசும் அதன் ஊக்கத்தொகையை உயர்த்தி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 வீதம் உழவர்களுக்கு கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் உடனடியாக எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் ! சென்னையின் வெள்ளத்தை சமாளிக்கவும், நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்கவும், மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் பயன்படக் கூடிய சென்னை பெருநகரின் உயிர்நாடியான பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு காலத்தில் 5,500 எக்டேர் பரப்பளவில் இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டது. பசுமைத் தாயகம் உள்ளிட்ட சூழலியல் அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு 2007ஆம் ஆண்டில் 698 எக்டேர் சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2022ஆம் ஆண்டில் 1248 எக்டேர் பரப்பானது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராம்சார் சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்டது.ஆனால், இன்றுவரை அதனை சட்டப்படியான சதுப்புநிலமாக, இந்தியஅரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017இன்கீழ், அறிவிக்கை செய்யவில்லை. அதன் எல்லையையும் தாக்கப்பகுதியையும் வரையறை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்ரோ அமைப்பின் சதுப்பு நிலங்கள் 2021 பட்டியலில் உள்ள 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் ஒன்று கூட இதுவரை அறிவிக்கை செய்யப்படவில்லை. சதுப்பு நிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என 11.12.2024-ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை. சதுப்பு நிலங்கள் இயற்கை கொடுத்த வரங்கள். அவற்றை அழிக்கக் கூடாது. எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், அதனுடன் இணைந்த 65 சதுப்பு நிலங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 26,883 சதுப்பு நிலங்களையும், சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017இன்கீழ் தமிழக அரசு உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும். மேலும், சென்னை பெருநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்களில் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.

ரெஸ்டோ பார்களை திறக்கும் கேடான திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் ! தமிழ்நாட்டில் ரெஸ்டோபார்கள் எனப்படும் உணவகங்களுடன் கூடிய மதுக்குடிப்பகங்களைத் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உண்மையா? என அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருந்த நிலையில், அத்தகைய திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக மதுவிலக்கு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மதுவிலக்கு விஷயத்தில் தமிழ்நாடு அரசு தவறான பாதையில் பயணிப்பதையே அதன் செயல்கள் உணர்த்துகின்றன. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டது ஆக்கப்பூர்வமான செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ரெஸ்டோபார்களை திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக மதுவிலக்கு அமைச்சரே தெரிவித்திருப்பது அரசின் நோக்கங்கள் குறித்த ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டால் மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்கள் அங்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும். தமிழ்நாட்டிற்கு சரி செய்ய முடியாத மருத்துவ மற்றும் கலாச்சார சீர்கேட்டை அவை ஏற்படுத்தி விடும். எனவே, ரெஸ்டோபார்களை திறக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை ஆண்டுக்கு 1000 கடைகள் வீதம் மூடி 4 ஆண்டுகளில் முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் இன்னும் கட்டுப்படுத்தப்படாத போதைப்பொருள்கள் நடமாட்டம்: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முதன்மையானது போதைப்பொருள்கள் புழக்கம் தான். போதைப்பொருள்களின் நடமாட்டம் தமிழ்நாட்டில் நீண்டகாலமாகவே இருக்கும் சிக்கல் தான் என்றாலும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தான் போதைப்பொருள்களின் கடத்தலும், வணிகமும் உச்சக்கட்டத்தை அடைந்தன. போதைப் பொருள்கள் புழக்கத்தால் மாணவர்கள் தொடங்கி பெண்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும் அது தான் காரணம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் கூட போதைப்பொருள்கள் கட்டுப்படுத்தப்படாதது தான் காரணம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த 65 சிறப்புப் படைகளை அமைத்து முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டார். ஆனாலும், தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள்களின் நடமாட்டம் இன்னும் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்கிறது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைப்பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றன. போதைப் பொருள்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் குற்றங்கள் அதிகரிப்பதுடன், சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும் ஏற்படும். எனவே, போதைப்பொருள்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பாமக பொதுக்குழு கோருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிங்கப்பெண் சிறப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும்! தமிழ்நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதற்காக சிங்கப் பெண்கள் சிறப்புப் படை அமைக்கப்பட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. அண்மையில் கூட கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது குழந்தை அதே பகுதியில் பணி செய்து வந்த மனித மிருகத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டது அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியது. இத்தகைய குற்றங்கள் தொடரக் கூடாது. ஒரு மாநிலத்தில் நல்லாட்சி நடைபெறுகிறதா? என்பது அம்மாநிலத்தில் பெண்களும், குழந்தைகளும் எந்த அளவுக்கு பாதுகாப்பாக வாழ்கின்றனர் என்பதைப் பொறுத்தே அமையும். பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சிங்கப் பெண்கள் சிறப்புப் படைக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை; அப்படைக்காக தனியாக காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட வில்லை. அதனால் சிங்கப்பெண்கள் சிறப்புப் படை என்பது பெயரளவிலேயே உள்ளது. இந்தப் படையை வலுப்படுத்தாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எனவே, சிங்கப் பெண்கள் சிறப்புப் படையின் தலைவராக டிஜிபி நிலை அதிகாரி ஒருவரை நியமித்து, அப்படைக்கு குறைந்தது 10 ஆயிரம் பெண் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்; அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; கடந்த காலகனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்! தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் அமைக்கப்பட்டு எல்லையில்லாமல் கனிமக் கொள்ளை நடைபெற்று வருகிறது. கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையாததையும் கடத்தல் தொடர்வதையும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சுட்டிக் காட்டிடதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், இது மட்டும் போதாது. கனிமக் கொள்ளை கட்டுப்படுத்தப்படாவிட்டால் மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்பாற்ற முடியாது; அதுமட்டுமின்றி கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியதைப் போன்ற நிலச்சரிவுகள் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. எனவே, இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்; இதுவரை நடந்த கனிமக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்; எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒருமனதாக கோரிக்கை விடுக்கிறது.

12 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். கட்டுமானத் தேவைகளுக்கு மணல் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இவை பெரும்பாலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படவுள்ளன. கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாட்டைப் போக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. புதிய குவாரிகள் திறக்கப்பட்டால், அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 2083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு மணல் எடுக்கப் பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். இந்த சூழலியல் சீரழிவை சரி செய்யவே முடியாது. கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க மணல் குவாரிகளை திறப்பது மட்டுமே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் இருப்பதால் அவற்றை ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஓரிடத்தில் தடுப்பணைகளைக் கட்டவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வகையில் அடுத்த ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசுத் துறைகளில் 6 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அவற்றை நிரப்புவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, 50,000க்கும் குறைவானவர்களுக்கே அரசு வேலைகளை வழங்கியது. தமிழ்நாட்டை இப்போது ஆட்சி செய்யும் தமிழக வெற்றிக் கழகமும் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து தான் ஆட்சிக்கு வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தவெகவுக்கு தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பதால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை தவெக அரசுக்கு உண்டு என்பதை பாமக பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 31.38 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் ஒரு கோடி பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இது தவிர்க்க முடியாதது ஆகும். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த 6 மாதங்களில் மட்டும் 72 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்க அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஆள்தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தமிழகத்திலும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு வேலை வழங்க வசதியாக அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

தமிழ்நாட்டில் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% பணிகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்காக அரசுத் தரப்பில் நடத்தப்படும் கலந்தாய்வுகளின் போது, தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தொழில் துறையினரும், அரசு அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதை பரிசீலிக்க அரசும் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்தால் அது பெரும் தவறாகும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், வெளிநாட்டு மற்றும் வெளிமாநில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதம் அபத்தமானது. ஆந்திராவில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் 75% பணியிடங்களை அம்மாநில இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் முதலீடுகள் தடைபடவில்லை. தமிழகத்திற்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75% அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 2.5%, மின்சாரக் கட்டணத்தில் 5% மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனியார் நிறுவன வேலைகளில் 75 விழுக்காட்டை தமிழக இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! தமிழக அரசுத் துறைகளில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். பாமகவும் அதை ஆதரித்து வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக கடந்த 15 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்த எந்த ஆட்சியாளரும் அதை செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழு, திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு ஆகியவை அவற்றின் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்த பிறகும் கூட அவை கிடப்பில் போடப்பட்டனவே தவிர, இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக திமுக ஆட்சியில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 01.01.2026 முதல் செயல்படுத்தப்படுவதாக திமுக அரசாணை பிறப்பித்தது. ஆனால், விதிகள் வகுக்கப்படாததால் அந்த திட்டமும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசு ஊழியர்களைப் பொருத்தவரை பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை தான் செயல்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான த.வெ.க. தேர்தல் அறிக்கையிலும் அதுவே வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

அரசு பள்ளிகளின் வீழ்ச்சியை தடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அனைத்துத் தரப்பினருக்குமான அறிவுக்கோயில்களாக திகழ்ந்த அரசு பள்ளிகளின் இன்றைய நிலை கவலையளிக்கிறது. 2024--25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2025--26ஆம் ஆண்டில் 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது. 2015--16 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆண்டுகளை கணக்கில் கொண்டால், அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சத்தில் இருந்து 32 லட்சத்து 49 ஆயிரமாக, அதாவது 43.03 லட்சம் குறைந்து விட்டது. இதே காலத்தில் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் தான் இதற்கு காரணம் ஆகும். அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழலில் அரசு பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும்? எவ்வாறு புத்துயிரூட்ட முடியும்? இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அரசு பள்ளிகளில் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் அரசு பள்ளிகளின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்க்கக் கூடாது; பல்கலைக்கழக சட்டங்களில் இதற்காக திருத்தம் செய்யக் கூடாது! தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவில் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பதற்கு வசதியாக குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்த தமிழக அரசு தீர்மானித்தது. இது பல்கலைக்கழக சட்டங்களுக்கு எதிரானது என்பதாலும், மாநில அரசின் உரிமைகளை தாரை வார்க்கும் செயல் என்பதாலும் அந்த முடிவை கைவிட வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத தமிழக அரசு, தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்த வசதியாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்திருக்கிறது. பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுனருக்கா, மாநில அரசுக்கா? என்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பளிக்கப்பட்டு விடும். அதன்பின் எந்தத் தடையும் இல்லாமல் தமிழக அரசின் விருப்பப்படியே துணைவேந்தர்களை நியமிக்க முடியும். அதனால், அவசரப்பட்டு நமது உரிமைகளை தாரை வார்க்கத் தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடல் குழுவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதிக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; பல்கலைக்கழக சட்டங்களை திருத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக பொதுக்குழு கோருகிறது.

பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் அளவு கடந்த ஐந்தாண்டுகளில் 13 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 38 லட்சம் லிட்டராக குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக வீழ்ச்சியடைந்து விட்டது. இதற்கு காரணம் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பது தான். தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலை கடைசியாக 2023-ஆம் ஆண்டு திசம்பரில் உயர்த்தப்பட்டது. பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்தால் வழங்கப்படுவதை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குகின்றன. அதனால் தான் ஆவின் பால் கொள்முதல் குறைகிறது. இந்த நிலையை மாற்ற ஆவின் நிறுவனம் அதன் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 என உயர்த்த வேண்டும் என்று பாமக பொதுக்குழு கோருகிறது. அதேபோல், தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலை, ஆவின் பாலை விட லிட்டருக்கு ரூ.22 முதல் ரூ.30 வரை கூடுதலாக உள்ளது. இதனால் ஏழை - நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பாதிப்பை போக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்; இதற்காக பால்விலை ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விண்ணைத் தொடும் அரிசி விலையால் ஏழை மக்கள் அவதி. விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாட்டில் சாப்பாட்டு அரிசி விலை நடப்பு ஜூலை மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு ரூ.1000 கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களால் இந்த விலை உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. அடுத்த சில மாதங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்பதைக் கணக்கிட்டு, அரிசி பதுக்கப்படுவது தான் பற்றாக்குறைக்கும், விலை உயர்வுக்கும் காரணம் ஆகும். அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை, மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அரிசி விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக கோருகிறது.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார். கிராம அளவில் மக்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும்! தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வந்து விட்டது. மீதமுள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதனால், சென்னை தவிர்த்த மீதமுள்ள 37 மாவட்டங்களிலும் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை அனைத்து நிலைகளிலும் எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான கூட்டணி உள்ளிட்ட அனைத்து உத்திகளையும் கட்சித் தலைமை வகுத்துக் கொடுக்கும். கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகிய நிலைகளில் தேர்தலை எதிர்கொள்வதற்கு வசதிட்யாக கட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், மக்களை சந்தித்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்ளும்படி பாமகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம நிர்வாகிகளை பாமக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்! தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் ஓரளவு சமாளிக்கக் கூடிய கட்டணத்தில் மருத்துவப் படிப்பை படிக்கும் நல்வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பாமக கோருகிறது. தனியார் கல்லூரிகளில் இருந்த 700 அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை இடங்கள் மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் தலா 1 வீதம் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி.களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உடனடியாக செயல்படுத்த வேண்டும்! மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீட்டில், உள்இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகிணி அவர்கள் தலைமையில் ஆணையம் ஒன்றை கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அமைத்து மத்திய அரசு ஆணையிட்டது. 3 மாதத்திற்குள் ரோகிணி ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தாலும் கூட, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து 2023-ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தான் ரோகிணி ஆணையம் அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு நிலை குறித்து அதிர்ச்சியான உண்மைகள் இடம் பெற்றுள்ளன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 2633 சாதிகளில் 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் நிலையில் மீதமுள்ள 2.66 விழுக்காட்டை 994 சாதிகள் பகிர்ந்து கொள்கின்றன. 983 சாதிகளுக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று ரோகிணி ஆணையம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் மீது இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஓ.பி.சி. வகுப்பில் உள்ள 2633 சாதிகளில் சுமார் 2 ஆயிரம் சாதிகள் 27% இடஒதுக்கீட்டால் பயன்பெறாத நிலையில், அதற்கான தீர்வாக ரோகிணி ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்; விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

காவிரி பிரச்சினையில் புதுச்சேரியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! காவிரி பிரச்சினையில் கர்நாடகம் இழைக்கும் துரோகங்களால் தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரி மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின்படி புதுவை மாநிலத்தின் கடைமடை பாசனப் பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், நடப்பாண்டில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததால் காரைக்கால் மாவட்டத்தில் குறுவை பயிர்கள் கருகுகின்றன. மேகதாது அணை கட்டப்படுவதற்கு முன்பாகவே இந்த நிலை என்றால், மேகதாது அணை கட்டப்பட்டால் புதுவைக்கு தண்ணீர் கிடைக்காது. புதுவை விவசாயிகளின் நலன் கருதி மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வலியுறுத்துகிறது.

புதுவையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள், சாராயக்கடைகளை மூட வேண்டும்! பொது இடங்களில் திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகள் தான் சிறுவர்கள் மதுவுக்கு அடிமை ஆவதற்கும், குற்றங்கள் பெருகுவதற்கும் காரணமாக உள்ளன. நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகள் தான் விபத்துகளுக்கு காரணமாக திகழ்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்திலும் இதே போல் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் சாராயக் கடைகளை புதுவை அரசு மூட வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

புதுவையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும்! புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வருகின்றன. அதற்கு தேவையான நிலங்கள் மண்ணின் மைந்தர்களிடமிருந்து தான் கையகப்படுத்தி வழங்கப்படுகின்றன என்றாலும் கூட, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. மாறாக பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கே வேலை வழங்கப்படுகிறது. ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போல, புதுவையிலும் தனியார் தொழில் - வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் 75% இடங்கள் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும்; இதற்கான சட்டத்தையும் புதுவை அரசு நிறைவேற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு இரங்கல்; புதிய தணிக்கையாளராக திருவாளர்கள் பி.எஸ். மூர்த்தி அசோசியேட்ஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல் ! பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலம் முதல் தணிக்கையாளராக சேவையாற்றி வந்த சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்த திரு. அரங்க. சுப்புரத்தினம் அவர்கள் உடல்நலக் குறைவால் கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் காலமானதை வருத்தத்துடன் இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவுக்கு இரங்கலையும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைக்கு பாராட்டுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சென்னைஅடையாறைச் சேர்ந்த திருவாளர்கள் பி.எஸ்.மூர்த்தி அசோசியேட்ஸ் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்திற்கு இந்தப் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template